மதுபான விலை அதிகரித்தமையினால், நாட்டினுள் மதுபான நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மதுபான உற்பத்தியை 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 6.5 மில்லியன் லிட்டர் குறைவடைந்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜே.குணசிரி தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வருடத்தில் மதுபான போத்தல்களின் (750 மில்லி) நுகர்வு 29 மில்லியனினாலும், அரை போத்தல்களின் (375 மில்லி) நுகர்வு 54 மில்லியனினாலும் மற்றும் மிகவும் பிரபலமான கால் போத்தல்களின் (180 மில்லி) நுகர்வு 115 மில்லியனாலும் குறைவடைந்துள்ளதாக எம்.ஜே.குணசிரி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடம் மதுவரித் திணைக்களத்திற்கு, நிதியமைச்சினால் மதுபானங்களிலிருந்து அறவிடப்படும் வரி வருமானத்தின் இலக்கு 217 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததுடன், பின்னர் குறித்த தொகை 181 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டது.
இவ்வருடம், புதிய புள்ளிவிபரங்களுக்கு அமைய நிதி அமைச்சினால் வரி வருமான இலக்காக 232 பில்லின் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மதுபான நுகர்வு குறைவடைந்துள்ளமையினால் குறித்த இலக்கை அடைவது கேள்விக்குறியாகியுள்ளதாக எம்.ஜே.குணசிரி மேலும் தெரிவித்துள்ளார்.