10 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள்..! 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 211 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. 

போட்டியின் இரண்டாம் நாளான இன்று, முதலாவது இனிங்கஸிற்காக துடுப்பெடுத்தாடி வந்த பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது

நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது பங்களாதேஷ் அணி சார்பில் களத்திலிருந்த தைஜுல் இஸ்லாம் அதிகப்பட்சமாக 47 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

பங்களாதேஷ் அணியின் ஏனைய வீரர்கள் சிறந்த ஆரம்பத்தினை பெற்றுக் கொண்ட போதும், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழந்தனர். 

பந்து வீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர். 

92 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிஷான் மதுஷ்க 10 ஓட்டங்களுக்கும்  அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 3 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க, திமுத் கருணாரத்ன மறுபுறத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

மெத்தியுஸ் 22 ஓட்டங்களுடனனும், தினேஷ் சந்திமல் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தனர். திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஷோரிஃபுல் இஸ்லாமின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களை பெற்றிருந்தது. அணி சார்பில், தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களுடனும் விஷ்வா பெர்னாண்டோ 2 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். 

பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் நஹித் ராணா அதிபட்சமாக 2 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். 

போட்டியின் முதலாம் நாள் விபரம், 

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் சிலேட் மைதனாத்தில் நேற்று(22) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. பின்னர், அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்த கமிந்து மென்டிஸ், இருவரும் இணைப்பாட்டமாக 200 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலு சேர்த்தனர். 

கமிந்து மென்டிஸ் டெஸ்டில் கன்னிச் சதத்தை பதிவு செய்ததுடன்,  தனஞ்சய டி சில்வாவும் 102 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

அணியின் ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி முதலாவது இனிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் கலீத் அகமது மற்றும் நஹித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர். 

இரண்டாவது இனிங்கஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர்கள், விஷ்வா பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, முதலாம் நாள் ஆட்டநேர முடிவின் போது பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுகளுக்கு 32 ஓட்டங்களை பெற்றிருந்தது. 

தற்போது, இலங்கை அணி 211 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளதுடன், போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை(24) காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version