புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் – ஜனாதிபதி

புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று (23) நடைபெற்ற “யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம்” உடனான சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரதும் பொறுப்பு என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய அரசியல்வாதிகள் பொறுப்பேற்கத் தயங்கிய நாட்டையே தான் பொறுப்பேற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிலர் தமது அரசியல் எதிர்காலம் பற்றி மாத்திரமே சிந்தித்த நிலையில் தான் நாட்டின் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்ததாகவும் கூறியுள்ளார்.

அரசாங்கம் மேற்கொண்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்களின் பிரதிபலன்கள் எதிர்வரும் சில வருடங்களில் மக்களுக்கு கிடைக்கும் என்றும் ,தங்களினதும் நாட்டினதும் எதிர்காலத்திற்கான சிறந்த வழி எதுவென்பதை நாட்டின் இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்” என்ற இந்த சந்திப்பில் நாட்டின் எதிர்காலம் மற்றும் தூரநோக்குக் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, இளையோரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version