லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்..!  

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 4வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணிக்கு எதிராக இன்று(24) நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றியை பதிவு செய்தது. 

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ராஜஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ஓட்டங்களுடனும் ஜோஸ் பட்லர் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். 

ரியான் பராக் 29 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். பின்னர் களத்திற்கு வந்த துருவ் ஜூரலின் அதிராடியான  துடுப்பாட்டத்தின் உதவியுடன் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

துருவ் ஜூரல் ஆட்டமிழக்காமல் 12 பந்துகளில் 20 ஓட்டங்களையும், இறுதிவரை களத்தில் இருந்த சாம்சன் 52 பந்துகளில் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

லக்னோ அணி சார்பில் நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளை  கைப்பற்றியிருந்தார். 

194 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. 

ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த  நிக்கோலஸ் பூரன் அணியின் ஓட்ட எண்ணிக்கையை  அதிகரித்தனர். 

கேஎல் ராகுல் 44 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். 

நிக்கோலஸ் பூரன் இறுதிவரை களத்திலிருந்த போதும் அவரால் அணியை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு செல்ல இயலவில்லை. நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

இதன்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. 

பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டார். 

போட்டியின் ஆட்ட நாயகனாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version