பேருவளையில் உள்ள பாடசாலை ஒன்றின் ஸ்மார்ட் வகுப்பறையினுள் 12 மடிக்கணினிகளை திருடிய குற்றச்சாட்டில், ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுள் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயதுடைய இரு மாணவர்களும் அடங்குவதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரு மாணவர்களும் பாணந்துறை மற்றும் பாதுக்க பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 23ஆம் திகதி பாடசாலையின் ஸ்மார்ட் வகுப்பறைக்குள் இருந்த மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இரு மாணவர்களும் மடிக்கணினிகளை விற்பனை செய்ய முயற்சிப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட மடிக்கணினிகளை மேலும் மூவரின் உதவியுடன் பாணந்துறை மற்றும் பாதுக்க பிரதேசங்களில் விற்பனை செய்ய இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதன்படி, குறித்த 5 சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பாதுக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.