சென்னையில் தடம் புரண்ட குஜராத் அணி..!  

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 63 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது. 

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று(26) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. 

இந்த போட்டியில் சென்னை அணியில் மஷேஷ் தீக்‌ஷனவிற்கு பதிலாக மதீஷ பத்திரன இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார். 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணிக்கு ரச்சின் ரவீந்திர அதிரடி ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.  ரச்சின் ரவீந்திர 20 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை பெற்றிருந்த பொழுது ஆட்டமிழந்தார். 

அணித் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, மத்திய தரவரிசை துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன், சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

ஷிவம் துபே 23 பந்துகளில் 51 ஓட்டங்களையும், டேரில் மிட்செல் 24 ஓட்டங்களையும் மற்றும் இறுதி ஓவர்களின் போது சமீர் ரிஸ்வி 6 பந்துகளில் 14 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

பந்துவீச்சில் ராஷித் கான் 2 விக்கெட்டுகளை அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டார். 

207 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த குஜராத் அணியின் வீரர்களால் அதிகளவு ஓட்டங்களை குவிக்க இயலவில்லை. 

குஜராத் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. 

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

குஜராத் அணி சார்பில் சாய் சுதர்ஷன் 37 ஓட்டங்களையும், விருத்திமான் சாஹா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் 21 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். 

சென்னை அணி சார்பில் பந்து வீச்சில் தீபக் சாஹர், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக சென்னை அணியின் ஷிவம் துபே தெரிவு செய்யப்பட்டார்.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version