நல்லிணக்கமே நாட்டின் பலம் – சஜித் 

எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், நட்புறவு என்றென்றும் பேணப்பட வேண்டும். நாட்டுக்கு இதுவே பக்க பலம். அந்தந்த மதங்களுக்குரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். பன்முகத்தன்மையை பாராட்ட வேண்டும். பன்முகத்தன்மையில் உருவாகும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும், கலாசார விழுமியங்களுக்கும் உரிய மரியாதையும் கௌரவமும் அளிக்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்ததாக எதிர்கட்சித் தலைவரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையிலான அடையாளத்தை பாதுகாக்க வேண்டும். மத சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாக்க வேண்டும். சுதந்திர நாட்டில் நாங்களும் நீங்களும் நம்பும்,பின்பற்றும் மதத்தைப் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல ஒன்றிணையுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இஸ்லாமிய மத நடைமுறைகளின்படி நோன்பு நோற்பதில் அனைவருக்கும் இடையேயான பரஸ்பர நட்பு, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் இஸ்லாமிய சமயக் கோட்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள உன்னத குணங்கள் நிறைவேறும் காலகட்டமாக இது அமைவதால்,ஆன்மீக ரீதியாக பக்குவப்பட்டு  இறை திருப்தி சகலருக்கும் கிட்ட வேண்டும் என தான் நேர் மனம் கொண்டு பிரார்த்திப்பதாகவும், விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு கொழும்பு வெள்ளவத்தை மெரைன் கிறேண்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று(29) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள், ஆளும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், புத்திஜீவிகள்,துறைசார் நிபுணர்கள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version