இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.
இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது போட்டியின் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி சொட்டாகிராமில் இன்று(30) ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இலங்கை அணிக்கு நிஷான் மதுஷ்க மற்றும் திமுத் கருணாரத்ன இருவரும் முதல் விக்கெட்டிற்காக 96 ஓட்டங்களை இணைப்பட்டமாக பெற்றுக் கொடுத்தனர்.
நிஷான் மதுஷ்க 57 ஓட்டங்களுடனும் திமுத் கருணாரத்ன 86 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மென்டிஸ் 7 ஓட்டங்களினால் சதத்தை தவறவிட்டிருந்தார். குசால் 93 ஓட்டங்களுடனும், அஞ்சலோ மெத்தியுஸ் 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 314 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தினேஷ் சந்திமல் 34 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 15 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுக்களையும் ஷகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை(30) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.