இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஜெய்பூரில் இன்று(06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பெங்களூரு அணி சார்பில் சதம் கடந்த விராட் கோலி ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களையும், அணி தலைவர் டியூ பிளசிஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் சலால் 2 விக்கெட்டுகளையும் நன்றே பர்கர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிக் கொண்டனர்.
184 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
ராஜஸ்தான் அணி சார்பில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும், அணி தலைவர் சஞ்சு சாம்சன் 69 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
இன்று தன்னுடைய 100வது ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய ஜோஸ் பட்லர் சதம் பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
பெங்களூரு அணி சார்பில் பந்துவீச்சில் ரீஸ் டொப்லி 2 விக்கெட்டுகளையும், யாஷ் தயால் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐ.பி.எல் தரவரிசை பட்டியலில் 4 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
பங்குபற்றிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு தரவரிசை பட்டியலில் தொடர்ந்தும் 8வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல் தரவரிசை பட்டியலில் கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்திலும், சென்னை மற்றும் லக்னோவ் அணிகள் தலா 2 வெற்றிகளுடன் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் காணப்படுகின்றன.
இதேவேளை, தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் நாளை(07) நடைபெறவுள்ளன. மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் லக்னோவ் மற்றும் குஜராத் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.