இலங்கை அணிக்கு எதிராக சதமடித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை இலங்கை மகளிர் மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி மழை குறுக்கிட்டதன் காரணமாக வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான போட்டி தென்னாப்பிரிக்காவில் ஈஸ்ட் லண்டன் மைதானத்தில் நேற்று(09) நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் டஸ்மின் பிரிட்ஸ் 116 ஓட்டங்களையும், லாரா வோல்வார்ட் 41 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் ஓஷதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, கவிஷா தில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றிக்கொண்டனர்.
271 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 6.5 ஓவர்களில் 23 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.
இதன் காரணமாக, நடுவர்கள் போட்டியை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்தனர்.
இலங்கை மகளிர் மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ளது.