பொதுத்தமிழ் வேட்பாளரை களமிறக்குவது சாத்தியமா? 

கடந்த காலங்களில் தமிழ் மக்கள், குறிப்பாக வடகிழக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புகள்,  தென்னிலங்கை தமிழ் வேட்பாளர்களுக்கு தாராளமாக வாக்களித்தார்கள். ஒரு முறை தேர்தலை பகிஸ்கரித்தார்கள். இந்த இரண்டு செயன்முறைகளும் எதிர்பார்க்கப்பட்ட பயன்பாட்டை தராத காரணத்தால்தான், இன்று பொது தமிழ் வேட்பாளர் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு கலந்து உரையாடபடுகிறது. இதன் சாத்தியப்பாடு,  பயன்பாடு தொடர்புகளில் கவனமாக ஆராய வேண்டும்.  

இவ்விதமாக பொது பொது தமிழ் வேட்பாளர் போட்டி இடுவார் எனில் அவருக்கு தமிழ் வாக்காளர்கள், குறிப்பாக வடகிழக்கு தமிழ் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக வாக்களிப்பார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்தது, இதன் மூலமாக முழு உலகிற்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் என்ன சொல்லப்பட உள்ளது என்பது தீர்மானிக்கப்பட  வேண்டும்.  பொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன?   குறிப்பாக,  அது பதின்மூன்றின் முழுமையான அமுலாக்கமா? பதின்மூன்று “ப்ளசா”?  சமஷ்டியா?  வடகிழக்கு இணைப்பா? இவை குறித்து முதலில் பொது முடிவுக்கு, தமிழ் கட்சிகள் வர வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழும்பில் நேற்று(09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கூறியதாவது,  

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் சில கட்சிகள், இன்று, ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என கோருகின்றன.  அவற்றின் சாத்தியப்பாடு, பயன்பாடு தொடர்பில் பல்வேறு கருத்தோட்டங்கள் இருக்கின்றன. ஆனால், இத்தகைய கருத்துகளை முன்வைக்க, அந்த கட்சிகளுக்கு உரிமை இருக்கின்றது.

ஆனால், பகிஷ்காரம் வேண்டாம். பொது தமிழ் வேட்பாளர் வேண்டும் என்று சொல்பவர்கள், அதன்மூலம் உலகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும். குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச கோரிக்கைகள்,  நிலைபாடுகள், அபிலாசைகள் என்ன? என்பவை பற்றி உரையாட வேண்டும்.

இன்னமும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதற்கிடையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தலும் நடைபெறலாம். மறுபுறம், தேர்தகள் ஆணையாளர் என்ன சொன்னாலும் கூட, ஜனாதிபதி தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒருசேர நடந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஆகவே இவை அனைத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும்.

இதற்கிடையில் எனது பெயரும் பொதுத்தமிழ் வேட்பாளர் பரிசீலனையில் முன்மொழியப்பட்டு உள்ளது. பொது அரசியல் பரப்பில் நாடறிந்த தமிழ் கட்சி தலைவராக நான் இருக்கின்ற காரணத்தால் இப்படியான ஒரு யோசனை சொல்லபடுகிறது. இதை சொல்ல எவருக்கும் உரிமை உண்டு. இதுபற்றி நானும், எனது கட்சியும் தான் தீர்மானிக்க வேண்டும். ஆகவே இது பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ள தேவையில்லை. இங்கே பொது தமிழ் வேட்பாளரை அடையாளம் காண முன், பொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன என தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் பிரதானமான தேவைபாடாகும். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version