நமது நாட்டில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் பலவீனமான நிலையிலயே உள்ளது. புதிய சட்டம் இயற்றப்பட்டாலும், அது போதுமா என்பதில் சிக்கல் நிலவிவருகிறது. இந்த ஊழலுக்கு எதிரான செயல்முறை பாராளுமன்ற சட்ட ஆணைகளால் உருவாக்கப்படாமல், நாட்டின் அரசியலமைப்பின் உயர் சட்டத்தால் ஆன ஒன்றாக அமைய வேண்டும். இலஞ்ச ஊழலுக்கு எதிரான செயற்பாடுகள் சுயாதீனமானதாகவும், வலுவானதாகவும் அமையும் வகையில் அதனை இலகுவில் மாற்ற முடியாத அத்தியாயமாக மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தினால் கொண்டு வரப்படும் சட்டம், பெரும்பான்மையால் மாற்றுவது சுலபம் என்பதால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை அரசியலமைப்பில் எளிதில் மாற்ற முடியாத சட்டமாக உருவாக்கி, அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தைப் போல வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு ஆக்கினால், ஜனாதிபதியாலோ அல்லது பாராளுமன்றத்தின் பெரும்பான்மையாலோ இதனை மாற்ற முடியாது போகும். இவ்வாறு பலமான ஏற்பாடாக மாற்றியமைப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மருந்துப்பொருள் மோசடி உட்பட சுகாதாரத் துறையில் இடம்பெற்ற பல ஊழல் மோசடிகளை வெளிக்கொணர்ந்தமையினால் பல மாதங்களாக தனது வேலையை இழந்து,
மீண்டும் சேவைக்குத் திரும்பிய விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ நேற்று (18) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான பயணத்தை வலுப்படுத்தும் முகமாக தனது ஆதரவை தெரிவித்து இணைந்து கொண்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டின் அடிப்படை உரிமைகள் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பரப்பு விரிவாகி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுடன் பொருளாதார, சமூக, கலாச்சார, மத, சுகாதாரம் மற்றும் கல்வி என்பன அடிப்படை உரிமைகளாக அமையும் வகையில் அர்த்தப்படுத்தப்பட வேண்டும். இது இவ்வாறு மாற்றப்படும் பட்சத்தில் ஊழல் மற்றும் தவறான செயல்கள் இடம்பெறாது. வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறாக, இந்தப் பகுதிகள் அடிப்படை உரிமைகளாக மாற்றப்படும்போது, இந்தப் பகுதிகள் தொடர்பாக ஆட்சியாளர்களும், உரிய அதிகாரிகளும் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாக நேரிடும். ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு இது பலத்த உந்து சக்தியாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, 113 பேர் அதனை கண்டுகொள்ளாது ஊழலுக்கும் தவறான செயற்பாடுகளுக்கும் துணைபோனர். இந்த மோசடிகளுக்கு சுகாதார அமைச்சர் போலவே 113 பேரும் பொறுப்புக் கூற வேண்டும். இந்த ஊழல் கொள்கைகளை பாதுகாக்க கை தூக்கிய தரப்பினரை நாம் மறந்து விடோம். இன்று நாட்டில் மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சியே செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வங்குரோத்து நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கை அடைய பல தியாகங்களைச் செய்து தேவையற்ற அழுத்தங்களுக்கு மத்தியிலும், தனது பணியை பணயம் வைத்தும், ஊழலுக்கு எதிரான முன்னெடுப்புகளில் கலாநிதி சமல் சஞ்சீவ பெரும் பங்காற்றினார். சிவில் பிரஜை என்ற வகையில் அவரது ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை தடையின்றி செயல்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி கரம் கொடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஊழல்கள் இடம்பெறும் நிறுவனங்கள் மற்றும் இடங்கள் குறித்து அறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு முறையான பொறிமுறையின் தேவை இருப்பதால், நாட்டின் அபிவிருத்தியை இலக்காக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஊழலுக்கு எதிரான திட்டத்திற்கு சட்டரீதியான அதிகாரம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.