ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நடமாடும் சேவை

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் மன்னார் மாவட்டத்தின் சகல மக்களுக்கும் கிடைக்கப்பெறுவதற்கான நடமாடும் சேவை, மன்னார் விளையாட்டரங்கில் ஞாயிறு மற்றும் சனி(20,21) ஆகிய இரண்டு தினங்களும் நடைபெறுகின்றது.

அதன் முதல் நாளான இன்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலிலும் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் எண்ணக்கருவில் இராஜாங்க அமைச்சர் புஸ்பகுமாரவின் ஒத்துழைப்புடனும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பங்களிப்புடனும் இந்த நடமாடும் சேவை மன்னாரில் நடைபெற்று வருகின்றது.

இலங்கை மத்திய வங்கி மற்றும் தொழில் திணைக்களங்கள் இணைந்து தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறக்கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் பணிக்கொடை தொடர்பான விடயங்களுக்கான பிரச்சனைகள் தீர்வு வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அவைகளுக்கு ‘சிமாட் போட்’ உபகரணங்கள் தொழில் அமைச்சினால் வழங்கப்பட்டன..

அத்தோடு ஆயிரம் வறிய மாணவர்களுக்கு அவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் ‘சிமாட் யுத்’ திட்டத்தின் கீழ் வேலையற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் தகுதிகளுக்கு ஏற்றவாறு பொருத்தமான தொழில் வாய்ப்புகளும் வழங்கும் திட்டமும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இதில் 40 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களும் பங்குபற்றியிருந்தன. இதனால் மன்னாரிலுள்ள  இளைஞர் யுவதிகள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பெறுவதற்கான வழிகாட்டலும் இங்கு நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்தில் முறைசாரா தொழில் புரிவோருக்கும் நன்மை பயக்கும் திட்டங்கள் அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்களின் இங்குள்ள பிள்ளைகளுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பாடசாலை உபகரணங்கள் நிதி உதவிகள் கொண்ட  திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version