உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதிகளுடன் எமக்கு டீல் இல்லை – சஜித்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலினால் இலங்கையில் கத்தோலிக்கர்கள் உட்பட பொது மக்கள் உயிர்களையும் அவயவங்களையும் இழந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலின் 5 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் கத்தோலிக்க பேரவை கொழும்பு புனித மரியாள் முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

5 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இந்தத் தாக்குதலின் உண்மை தகவல்களோ, இதன் பின்னணியில் செயற்பட்ட சூத்திரதாரிகள், பிரதான நபர்கள், குழுக்கள் குறித்த உண்மைகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து தலைவர்களும் உண்மையைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தனர்,

ஆனால் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே அந்த வாக்குறுதிகளை வழங்கினர், பின்னர் அவர்கள் ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றி உண்மைகளை மறைத்து வருகின்றனர்.

இவ்வாறான சூழலில் இந்த கொடூர தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் எந்த வகையிலும் காப்பாற்ற தான் செயற்படமாட்டேன் , சுதந்திரமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட்டு, இந்த பயங்கரவாதத் தாக்குதலை திட்டமிட்ட சூத்திரதாரிகளையும் குழுக்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு எதிராக அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்.

இந்த கொடூர தாக்குதலுக்கு இதன் பின்னணியில் உள்ள சக்திகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் , கர்தினால் உட்பட கத்தோலிக்க திருச்சபைக்கும் நாட்டு மக்களுக்கும் தான் உறுதியளித்துள்ளேன்,

பதவிகளை பாதுகாப்பதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கமாட்டேன்

அத்துடன் இதுவரையில் உருவாக்கப்பட்ட அரசாங்கங்கள் மக்களையும், கத்தோலிக்க சமூகத்தையும், கர்தினால் அவர்களையும் ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பின் இதற்கு நீதி வழங்காமல் பிரதான சூத்திதாரிகளை பாதுகாக்கும் போக்கு இதுவரை காணப்பட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் தரம் பாராமல் தண்டிக்கப்படுவார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளுடன் சஜித் பிரேமதாசவாகிய நான் ஒருபோதும் டீல் செய்துக்கொள்ளமாட்டேன் , தராதரம் பராமல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுடன் அவரது பாரியார் திருமதி ஜலனி பிரேமதாசவும் இந்த அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த தலைமையில் ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version