இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ராகுல் தெவாத்தியாவின் அதிரடி துடுப்பாட்டத்தின் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை 19.1 ஓவர்களில் கடந்தது.
சண்டிகரில் இன்று(21.04) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பஞ்சாப் அணி சார்பில், பிரப்சிம்ரன் சிங் 35 ஓட்டங்களையும், ஹர்ப்ரீத் பிரார் 12 பந்துகளில் 29 ஓட்டங்களையும் மற்றும் அணி தலைவர் சாம் கரன் 20 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
குஜராத் அணி சார்பில் பந்துவீச்சில், சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், மோஹித் சர்மா மற்றும் நூர் அஹமட் தலா 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.
143 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
குஜராத் அணி சார்பில் ராகுல் தெவாத்தியா 18 பந்துகளில் 36 ஓட்டங்களையும், அணி தலைவர் சுப்மன் கில் 35 ஓட்டங்களையும் மற்றும் சாய் சுதர்சன் 31 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் அணி சார்பில் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், லியம் லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் சாம் கரன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன் போட்டியின் ஆட்ட நாயகனாக சாய் கிஷோர் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக குஜராத் டைட்டன்ஸ் அணி, ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும், தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 9ம் இடத்திலும் உள்ளது.
இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஜெய்பூரில் நாளை(22.04) இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.