வங்கி கணக்கு உரிமையாளர்களுக்கு எவ்வித அறிவிப்புக்களும் வழங்கப்படமால், நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குளிலிருந்து வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் பரிமாற்றப்படும் பெரும் மோசடி நடைபெற்றுவருவதாக வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.
பொது மக்களின் நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகளில் இருந்து பணம் வேறு கணக்குகளுக்கு ஒரே நாளில் பணம் பரிமாற்றப்பட்டிக்கின்றமை தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட பாராளுமன்றத்தில் இன்று(26.05) வெளிக்கொண்டு வந்தார்.
இணைய வழியில் பணம் பரிமாற்றம் செய்யும் நபர்களே இந்த மோசடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பலாங்கொடையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து எவ்வித அறிவிப்புக்களுமின்றி 1.1 மில்லியன் ரூபா இவ்வாறு வேறு வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட சுட்டிக்காட்டினார்.
நிறுவனமொன்றின் ஊடாக இணைய பண பரிவர்த்தனை தொடர்பில் பயிற்சி பெற்ற குழுவொன்றே இந்த மோசடியின் பின்னால் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை சுமார் 1000 வங்கி கணக்குகளில் இருந்து இவ்வாறு சட்டவிரோத முறையில் பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மோசடி தொடர்பில் மத்திய வங்கிக்கு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட வலியுறுத்தினார்.