கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய காரணிகள் தவிர்த்து‌ இன்று காலை 11 மணிக்கு பின்னர் கொழும்பில் வீதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாளிகாவத்தை PD சிறிசேன மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதனால் சங்கராஜ மாவத்தையிலிருந்து பிரதீபா மாவத்தை, ஜும்மா மஸ்ஜித் சந்தியிலிருந்து பிரதீபா மாவத்தை, சங்கராஜ மாவத்தை மற்றும் ஜும்மா மஸ்ஜித் சந்திக்கு இடைப்பட்ட அனைத்து இடை வீதிகளிலிருந்து பிரதீபா மாவத்தைக்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கோட்டை சத்தம் வீதியில் இடம்பெறவுள்ள நிலையில் யோர்க் தெருவிலிருந்து சி.டி.ஓ சந்தி வரையான வீதிகள் மூடப்பட்டிருக்கும்.

தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணி கொழும்பு BRC மைதானத்தில் பிற்பகல் 02 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 3.30 க்கு CWW கன்னங்கரா மாவத்தையில் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதனால் எப்.ஆர்.சேனநாயக்க மாவத்தை, தர்மபால சுற்றுவட்டம், சொய்சா சுற்றுவட்டம் மற்றும் ஹோர்டன் பிளேஸ் ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. எவ்வாறாயினும் அப்பகுதியில் உள்ள வீதிகள் மூடப்பட மாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply