இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மேல் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் மூவரும் இன்று(03.05) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதத்தில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த மீனவர்களுக்கு, 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பில் இந்திய அரசினால் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், குறித்த மூவரும் விசைப் படகோட்டிகள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்பதால், நல்லிணக்க அடிப்படையில் 06 மாத சிறைத் தண்டனையை இரத்து செய்து, யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்று இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(03.05) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையும் வாசிக்கப்பட்டுள்ளது.
பின்னர், மூவரையும் விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார்.