மன்னார் தீவில் காற்றாலை உயர் மின் திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக,தொடர்ந்தும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.
மன்னார் தீவில் காற்றாலை மின் உற்பத்திக்கான நடவடிக்கையினால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் இப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்றையதினம் புதன்கிழமை (08.05) மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே பிரஜைகள் குழு தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
” மன்னார் தீவில் காற்றாலையால் எமக்கு ஏற்பட்டுள்ள அழிவுகளை பல முறை தெளிவுப்படுத்தியுள்ளோம். அப்படியிருந்தும் தற்பொழுது அதானி நிறுவனத்துக்கு 52 காற்றாலைகள் நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை வேதனையளிக்கிறது. எமது பண்பாடு, மற்றும் வரலாற்றுச் சுவடுகள் யாவும் அழிக்கப்பட போகின்றது. மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு மக்கள் வாழ முடியாத நிலைக்கு தொடர்ந்து தள்ளப்பட போகின்றனர் இவ்வாறான நிலையில், மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்க பின் நிற்கப் போவதில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.