எரிபொருள் விலைக்கான உறுதிப்படுத்தல் நிதியத்தை நடைமுறைப்படுத்தாவிடின் குறைந்த பட்சம் எரிபொருள் விலை சூத்திரத்தையாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (23/11) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அது குறித்து தொடர்ந்துரையாற்றுகையில், எரிபொருள் விலைக்கான உறுதிப்படுத்தல் நிதியை அறிமுகப்படுத்துவதற்கான பத்திரத்தை தான் முன்னராகவே அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாகவும், எனினும் அது இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் விலைக்கான உறுதிப்படுத்தல் நிதியை அமல்படுத்தவில்லை என்றால், குறைந்த பட்சம் எரிபொருள் விலை சூத்திரத்தையாவது மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய வங்கி முன்மொழிந்துள்ளதாகவும் உதய கம்மன்பில கூறினார்.
