அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யோசனை முன்வைத்துள்ளார்.
தேசிய வளங்கள் மற்றும் அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் இடைக்காலத் தன்மையை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி, அரச சொத்துக்கள் தொடர்பான தீர்மானங்களை, வாக்காளர்களிடம் இருந்து கிடைக்கும் ஆணைக்கு ஏற்ப எதிர்காலத்தில் உருவாக இருக்கு நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
“அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அரச சொத்துக்கள் அல்லது நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிகின்றேன். புதிய அரசாங்கம், அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை தேர்தலில் அவர்கள் பெற்றுக் கொள்ளும் ஆணைக்கு ஏற்ப கையாள முடியும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
