வியாஸ் ஏன் உலகக்கிண்ண அணியில் இடம்பெறவில்லை – உப்புல் தரங்க விளக்கம்

20-20 உலகக்கிண்ண தொடருக்கான 15 பேரடங்கிய அணியினை உப்புல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவு செய்து அறிவித்திருந்தது. இந்த அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் அணியோடு பயணிக்கும் மேலதிக வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணி இன்று(13.05) அமெரிக்க மற்றும் மேற்கிந்திய தீவுகள் நோக்கி உலகக்கிண்ண தொடருக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. வியாஸ்காந்த் IPL தொடர் நிறைவடைந்த பின்னரே அணியோடு இணைவார் என உப்புல் தரங்க தெரிவித்துள்ளார்.

இறுதியாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜெப்ரி வண்டர்சாய் விக்கெட்டை கைப்பற்றக்கூடியவர் என்ற காரணத்தினால் உலகக்கிண்ணத்தை குறி வைத்து அணியில் சேர்க்கப்பட்டதாகவும், அடுத்த தெரிவு வியாஸ்காந்த் எனவும் உப்புல் தரங்க கூறியிருந்தார். இருப்பினும் அணியில் வியாஸ்காந்த் சேர்க்கப்படவில்லை. உலகக்கிண்ண இலங்கை அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேரில் ஏன் வியாஸ் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என வி மீடியா பணிப்பாளர் விமல் இன்று(13.05) ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வியெழுப்பியிருந்தார்

வனிந்து ஹஸரங்க லெக் ஸ்பின் பந்துவீச்சாளர். வியாஸ்காந்தும் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர். ஏனைய இருவரும் வேறு விதமான சுழற்பந்து வீச்சாளர்கள். ஆகவேதான் வியாஸ்காந்த் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என உப்புல் தரங்க விளக்கமளித்தார். ஆனாலும் அவருடைய பந்துவீச்சு அணிக்கு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய ஆடுகளங்களில் கைகொடுக்கும் எனவும் மேலும் கூறியிருந்தார்.

வியாஸ்காந்த வெளிநாட்டு லீக் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் உயரமாக இருப்பதனால் பந்துவீசும் விதம் சிறப்பாக இருக்கிறது. உள்ளூர் போட்டிகளில் அவர் அதிகம் விளையாட வேண்டும். அவர் திறமையானவர் என ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தெரிவுக்குழு உறுப்பினர்களான சுழற்பந்து வீச்சாளர்கள் டில்ருவான் பெரேரா, அஜந்த மென்டிஸ் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.

உலகக்கிண்ண அணியோடு வியாஸ்காந்த் பயணிப்பது அவருக்கு மேலும் அனுபவத்தை வழங்கும். அணித்தெரிவில் அவர் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என கேள்வி எழுப்புமளவுக்கும், அதற்கு பதிலளிக்கும் வகையிலும் உயர்ந்துவிட்டார் என்பது விரைவில் அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது தொடர்பில் வியாஸ்காந்த் இன்னமும் கூடுதல் கவனம் எடுப்பது அவருக்கான வாய்ப்புகளை இலகுபடுத்தும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version