2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரை, டெல்லி கப்பிட்டல்ஸ் அணி வெற்றியுடன் நிறைவு செய்தது.
லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி வெற்றியீட்டியது. இதனுடாக, தொடரில் மொத்தமாக 14 போட்டிகளில் பங்குபற்றிய டெல்லி அணி 7 வெற்றிகளுடன் தொடரை நிறைவு செய்தது.
டெல்லியில் இன்று(13.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. டெல்லி அணி அபிஷேக் பூரல் 58 ஓட்டங்களையும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லக்னோ அணி சார்பில் பந்துவீச்சில் நவீன் உல் ஹாக் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
209 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. லக்னோ அணி சார்பில் நிக்கோலஸ் பூரன் 61 ஓட்டங்களையும், ஹர்ஷத் கான் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
டெல்லி அணி சார்பில் பந்து வீச்சில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதன்படி, இந்த போட்டியில் டெல்லி அணி 19 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக டெல்லி அணியின் இஷாந்த் சர்மா தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டிய டெல்லி அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 14 புள்ளிகளுடன் 5ம் இடத்திற்கு முன்னேறிய போதிலும், Playoffs சுற்றுக்கு தகுதிப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்றது.
இதேவேளை, இன்றைய போட்டியில் தோல்வியடைந்த லக்னோ அணி தரவரிசையில் 12 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது. லக்னோ அணிக்கு மேலும் ஒரு போட்டி மீதமிருக்கின்ற போதும், குறித்த போட்டியில் பாரிய வெற்றியை பதிவு செய்வதன் ஊடாக மாத்திரமே Playoffs சுற்றுக்கு தகுதிப் பெறுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.