கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 
கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 
பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் 
பிரேமஜயந்த தெரிவித்தார்.

அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்து அதற்குரிய சுற்றுநிருபம் 
எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (14.05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், 

“இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் கல்வி அமைச்சைப் பொறுப்பேற்ற போது 
எரிபொருள் வரிசைகளினால் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையே 
காணப்பட்டது. விடைத்தாள்களை திருத்துவோருக்கு போக்குவரத்து வசதிகளை 
வழங்குவதற்கான எரிபொருள் கூட இருக்கவில்லை. 14 மணி நேரமும் மின்வெட்டு 
காரணமாக, பிள்ளைகள் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் 
இருந்தது. இதற்கிடையில் அவ்வப்போது பாடசாலைகளை மூடிவைக்க வேண்டிய 
நிலைமையும் காணப்பட்டது.

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால், கல்வி 
நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. சரியான நேரத்தில் பரீட்சைகளை நடத்தி 
பெறுபேறுகளை வெளியிட முடியவில்லை. பின்னர், பொருளாதார நெருக்கடி 
வலுவடைந்ததால், கல்வித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆனால் தற்போது நிலைமை சுமூகமாகியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான 
பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் வழமை போல 
நடத்தப்படுகின்றன. அதற்காக சாதாரண தர பரீட்சையை டிசம்பரிலும், உயர்தர 
பரீட்சையை ஓகஸ்டிலும் நடத்த வேண்டியுள்ளது.  இது தொடர்பில் மாகாண 
அதிகாரிகளுடனும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடியுள்ளோம்.

கலந்துரையாடலின் போதான யோசனைக்கு அமையவே செயற்பட்டு வருகிறோம். அதன்படி டிசம்பரில் நடக்க வேண்டியிருந்த சாதாரண தர பரீட்சை இன்றடன் நிறைவுக்கு வருகிறது. அதன் பின்னர் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 
ஆரம்பிக்கப்படவிருப்பதோடு,  உயர்தர பரீட்சைக்கான வகுப்புகளும் 
ஆரம்பமாகும். இந்த ஆண்டு 452,000 மாணவர்கள் சாதாரண தர பரீட்சைக்குத 
தோற்றினர். அவர்களில் 388,000 பேர் முதல், இரண்டாவது அமர்வுக்காக 
பாடசாலைகளிலிருந்து தோற்றிய மாணவர்களாவர்.

அந்த மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் உயர்தர வகுப்புகளில் இணைய 
வாய்ப்பு கிடைக்கும். அதற்கு தேவையான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே 
பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் 15  ஆம் திகதி 
வௌியிடப்படும். பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மே மாதம் 20ஆம் திகதி 
பாடசாலைகளின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

மேலும், கல்வி நிர்வாக மறுசீரமைப்புச் செயற்பாடுகள் ஆரம்ப கட்டத்தை 
எட்டியுள்ளோம். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு 
அதன் சுற்றுநிருபம் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும். அதற்கமைய 
நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படவுள்ளதுடன், 
அவற்றை மேற்பார்வையிடுவதற்காக 350 பாடசாலை சபைகள் உருவாக்கப்படும்.

தற்போதுள்ள 100 கல்வி வலயங்களும் படிப்படியாக அதிகரிக்கப்படும். 
பாடசாலைள் குழுக்களின் அடிப்படையில், 01 – 11 ஆம் ஆண்டு வரையிலான 
வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு மாணவர்களை உயர்தரத்திற்கு உள்வாங்கும் அதிகாரம் அதிகாரிகளுக்கு உள்ளது.

மேலும், இரசாயனவியல்,பௌதீகவியல், உயிரியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் 
மற்றும் வெளிநாட்டு மொழிப் பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை 
நிரப்புவதற்கான நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வில் 
பங்கேற்ற 7,000 பேரில் 3,000க்கும் மேற்பட்டவர்களுக்கு பாடப்  பொருத்தத்தின் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி முடிந்த பின்னர் ஜூன் 1 ஆம் திகதிக்குள் பாடசாலைகளில் இணைக்கப்படுவர். விஞ்ஞான தொழில்நுட்ப பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவுக்கு தீர்க்கப்படும். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்ட மாகாண ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான பிரச்சினைகளும் தற்போது தீர்க்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், அதிபர்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழுவொன்றும் 
நியமிக்கப்பட்டிருக்கிறது. அதிபர்களின் தொழிற்சங்கங்களினால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் 
அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் அதிபர்களுக்கான 
கொடுப்பனவுகள், தரம் உயர்த்துதல் மற்றும் ஏனைய சில நடைமுறை விடயங்கள் 
உள்ளடங்கியுள்ளன.

மேலும் கல்வி நிர்வாக சேவையில் பல வெற்றிடங்கள் காணப்பட்டன. 
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 
அவர்களில் 404 பேரை உள்வாங்குவதற்கான  நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் 
ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும், 800 ஆசிரியர் பயிற்றுனர்களை ஆட்சேர்ப்பு 
செய்வதற்கான இரண்டாவது நேர்முகப் பரீட்சை எதிர்வரும் நாட்களில்  நடைபெறவுள்ளது. தேசிய கல்வியியற் கல்லூரிகளை  மற்றும் பல்கலைக்கழகங்களாக 
மாற்றுவது தொடர்பான சட்ட மூலங்களை உருவாக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளது.” 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version