மன்னாரில் கனியவள மணல் அகழ்விற்கு மக்கள் எதிர்ப்பு 

மன்னார் தீவின் சுற்றுச் சூழல் காரணமாக, கனியவள மணல் அகழ்வுக்கான  சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையைப் பெற அனுமதிக்க முடியாது என மக்கள் உறுதியாகக் கூறிய நிலையில்,  மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கனியவள மணல் அகழ்வு தொடர்பான கூட்டம் கைவிடப்பட்டது.

மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கத்தினை அளிக்கும் படி மன்னார் அரசாங்க அதிபருக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற வேண்டுகோளுக்கு அமைய  இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் கடந்த 13ம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இதற்கான கூட்டம் இடம்பெற்றது.

இதில் கனியவள மணல் அகழ்வு நிறுவன அதிகாரிகள் உட்பட மன்னார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரச திணைக்கள அதிகாரிகள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்த நிலையில், பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் கூட்டம் கைவிடப்பட்டது.

இது தொடர்பாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,

“மன்னார் மாவட்டத்தில் அவுஸ்ரேலியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற கனியவள மணல் அகழ்வு நிறுவனத்தினால் மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வை மேற்கொள்வதற்காக 2018 ஆம் ஆண்டு தொடக்கம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று வரை இது தொடர்பான ஆய்வுகள் மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதை அடிப்படையாக வைத்து இங்கு தொடர்ந்து கனியவள மணல் அகழ்வை மேற்கொள்ளும் முகமாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முயன்று வருகின்ற நிலையில் சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்பினைக் கருத்திற்கொண்டு, பொது மக்கள் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் நிலையில், மன்னார் தீவு மக்கள் மன்னார் தீவில் கணியவள மணல் அகழ்வு செய்ய விரும்பாத காரணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாங்கள் அறிக்கை மூலம் சமர்பிக்க இருக்கின்றோம்” எனத் தெரிவித்தார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version