இந்தியாவின் PhonePe பரிவர்த்தனை இலங்கையில் அறிமுகம் 

இலங்கையில் UPI அடிப்படையிலான சேவைகளுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் முகமாக, PhonePe பரிவர்த்தனை கட்டமைப்பானது LankaPay உடன் இணைந்து PhonePe UPI கட்டண முறைமைகளை நேற்றைய தினம்(15.05) இலங்கையில் ஆரம்பித்து வைத்தது. வங்கித் துறையினைச் சேர்ந்த உயரதிகாரிகள், கட்டண முறைமை வழங்குனர்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களினது பிரசன்னத்துடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி நந்தலால் வீரசேகர ஆகியோர் முன்னிலையில் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் கட்டண கொடுப்பனவு செயலி தொகுதியானது ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் ஜா, இலகுவான முறையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை மேற்கொள்கின்றமை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையினை மேலும் ஊக்குவிக்குமென தெரிவித்திருந்தார். அத்துடன் ஹோட்டல்களை முற்பதிவு செய்தல், வாகன முற்பதிவு மற்றும் ஏனைய விநியோக சேவைகளுக்காக UPI முறைமையினைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை இந்திய கம்பனிகளுடன் இணைந்து இலங்கை கம்பனிகள் உருவாக்கவேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

2024 பெப்ரவரி 12ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து இலங்கையில் ஒருங்கிணைந்த கட்டண முறைமையான UPIஇனை ஆரம்பித்து வைத்திருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளத்தக்கதாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஜூலை மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை ஆவணத்தினை மேற்கோளிட்டு அச்சந்தர்ப்பத்தில் உரை நிகழ்த்தியிருந்த பிரதமர் நரேந்திர மோடி, நிதி இணைப்புகளை வலுவாக்குதல் அந்த ஆவணத்தின் முக்கிய அங்கங்களில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

குறித்த முறைமை ஆரம்பித்துவைக்கப்பட்ட தருணத்திலிருந்து இதுவரையில் இலங்கையில் 6000க்கும் அதிகமான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 240 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான கொடுப்பனவாக அவை பதிவாகியுள்ளன. இந்நிலையில் PhonePe UPI அங்குரார்ப்பணமானது, குறிப்பாக இலங்கையின் முன்னணி வாடகை வாகன மற்றும் விநியோக செயலியான PickMe போன்ற சேவை வழங்குனர்களுடன் மேலதிக இணைப்புகளை மேற்கொள்வதன் மூலமாக டிஜிட்டல் நிதி தொழில்நுட்ப இணைப்பினை மேலும் விஸ்தரிக்கின்றது.

டிஜிட்டல் துறைகள் மூலமாக இணைப்புகளை விஸ்தரிப்பதன் மூலமாக இரு நாட்டு மக்களிடையிலுமான தொடர்புகள் வலுச்சேர்க்கப்படுவது மட்டுமல்லாமல், இரு நாடுகளினதும் மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை இலக்காகக் கொண்டு தொழில்நுட்பத்துறையின் புதிய மற்றும் வளர்ந்து வரும் சகல துறைகளிலும் இந்தியா இலங்கை இடையிலான பங்குடைமைக்கான உறுதியான உதாரணமாகவும் இது அமைகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version