தும்புரை தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சட்டம், ஒழுங்கை கையிலெடுத்து தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

தும்புரை தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக அரங்கேறிய வன்முறைச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையக சிவில் உரிமைக்கான இயக்கத்தால் இரத்தினபுரி நகரில், மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் இன்று (16) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே ஜனாதிபதியின் நோக்கம். எனவே, அவர்களின் பாதுகாப்பு நிச்சயம் உறுதிப்படுத்தப்படும்.

வன்முறை மற்றும் அடாவடியில் ஈடுபடுபவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியின்கீழ் தப்பவே முடியாது.
தும்புரை தோட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தோட்ட அதிகாரிகளின் அராஜக சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மீண்டும் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கும், தொழிலாளர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுவருகின்றோம்.

தோட்ட நிர்வாகத்துக்கு இது தொடர்பில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் வேற்றுக்கிரகவாசிகள் அல்ல. இந்நாட்டுக்காக உழைத்தவர்கள், கூடையை மட்டும் அல்ல பொருளாதாரத்தையும் சுமப்பவர்கள். அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும். அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு நாம் இடமளிக்கபோவதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியே இலங்கையில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையாகும். அவரின் ஆட்சியின்கீழ் அனைவருக்கும் சம உரிமைகள் கிட்டும்.

எவருக்கும் பாகுபாடு காட்டப்படமாட்டாது. சட்டம், ஒழுங்கு முறையாக செயற்படும் என்ற உத்தரவாதத்தை என்னால் வழங்க முடியும்” என கூறினார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட தொழிலாளியை பொலிஸாரும், தோட்ட அதிகாரிகளும் மிரட்டியுள்ளனர் என சுட்டிக்காட்டி, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபரிடம் ஆனந்தகுமார் கோரிக்கை விடுத்தார்.

பிரதி பொலிஸ்மா அதிபரை வரவழைத்து பாதிக்கப்பட்ட தொழிலாளியை அவரிடம் வாக்குமூலம் வழங்க வைப்பதற்கும் ஆனந்தகுமார் நடவடிக்கை எடுத்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version