சீரற்ற வானிலையால் 33,000 அதிகமானோர் பாதிப்பு 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் 33,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இதன்படி இரத்தினபுரி, கொழும்பு, கேகாலை, அனுராதபுரம், கண்டி, காலி, யாழ்ப்பாணம், களுத்துறை, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளிலுள்ள மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 1,827 பேர், 11 தற்காலிக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான நிவாரணத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

மேலும், கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் நேற்று இரவு(20.05) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் காரணமாக  ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பிரதேசங்களிலும் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, ஹப்புத்தளை, ஹாலிஎல, பதுளை மற்றும் எல்ல பிரதேசங்களில் முதலாம் கட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் மஹவிலச்சிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன்,  குருநாகல் மாவட்டத்தில் தெதுறு ஓயாவின் மூன்று வான் கதவுகளும் பதுளை மாவட்டத்தின் உள்ஹிட்டிய ஓயா மற்றும் ரத்கிந்த ஓயாவின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. 

ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலங்களில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version