பாலித ரங்கே பண்டார அரசியலமைப்பை புரிந்து கொள்ளாது கருத்துக்களை வெளியிடுவதாக குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார அரசியலமைப்புச் சட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருத்துக்களை வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கீன்ஸ் நெல்சன் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் 2 வருடங்களுக்கு ஒத்திவைத்து, தேவைப்பட்டால் இதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார கூறியதையடுத்து கீன்ஸ் நெல்சன் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்

“அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலுக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த முடியாது.

பாலித ரங்கே பண்டார இந்த கதையை நாட்டுக்கு கூறும் முன், அரசியலமைப்பின் எந்தப் பிரிவு இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அவர் முதலில் சுட்டிக்காட்ட வேண்டும். இவ்வாறான பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு பாலித ரங்கே பண்டாரவிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி அரசியலமைப்பைப் பாதுகாப்பேன் என உறுதி மொழி வழங்குகிறார். பாலித ரங்கே பண்டார அரசியலமைப்பை மீறும் செயலயே மேற்கொள்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் 2 வருடங்களுக்கு ஒத்திவைக்க அல்லது பதவிக் காலத்தை நீடிக்க பிரேரணைகள் கொண்டு வரப்பட்டால் அந்த பிரேரணைகளை நிச்சயமாக தோற்கடிப்போம்.

பொதுத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்பில் ஏற்பாடுகள் இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பிலான சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் அரசியலமைப்பில் எந்த ஏற்பாடும் இல்லை.

பதவிப் பிரமானத்தில் நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி அரசியலமைப்பை பாதுகாப்பதாக உறுதிமொழி வழங்குகிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றை எவ்வாறு நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவருவது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version