முக்கிய வெற்றியுடன் உலகக் கிண்ணத்திற்குள் நுழையும் மேற்கிந்திய தீவுகள் அணி

டி20 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சி போட்டிகளில் அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியீட்டியது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று(30.05) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இந்த போட்டியில் அவுஸ்ரேலியா அணி சார்பில் 9 வீரர்கள் மாத்திரம் பங்குபற்றியதுடன், அணியின் பயிற்சிவிப்பாளர்கள் இருவரும் களத்தடுப்பில் ஈடுப்பட்டிருந்தனர். 

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் நிகோலஸ் பூரான் 75 ஓட்டங்களையும், ரோமன் பவுல் 2 ஓட்டங்களையும், ரதர்ஃபோர்ட் 47 ஓட்டங்களையும், ஜான்சன் சார்லஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அவுஸ்ரேலியா அணி சார்பில் பந்துவீச்சில் ஆடம் ஸம்பா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

258 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. அவுஸ்ரேலியா அணி சார்பில் ஜோஷ் இங்கிலிஷ்  55 ஓட்டங்களையும், நாதன் எல்லிஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்து வீச்சில் அல்சாரி ஜோசப், குடாகேஷ் மோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டனர். இதன்படி, இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 35 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. 

இதேவேளை, பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் நமீபியா அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(30.05) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பப்புவா நியூ கினியா அணி சார்பில் Sese Bau 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். நமீபியா அணி சார்பில் ரூபன் ட்ரம்பெல்மேன், டேவிட் வைஸ், டாங்கேனி லுங்காமேனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டனர். 

110 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 16.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 93 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போட்டி இடைநிறுத்தப்பட்டது. இதன் காரணமாக DLS முறைப்படி நமீபியா அணி 3 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. நமீபியா அணி சார்பில் ஜான் ஃப்ரைலின்க் 36 ஒட்டங்களையும், ஜேபி கொட்சே 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பப்புவா நியூ கினியா அணி சார்பில் பந்துவீச்சில் அசாத் வாலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

கனடா மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிரான மற்றுமொரு பயற்சி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. அமெரிக்காவின் டல்லாஸில் நேற்று(30.05) நடைபெறவிருந்த இந்த போட்டியின் ஆரம்பம் முதலே மழைக்குறுக்கிட்டதன் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றயீட்டியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

இதேவேளை, இலங்கை அணி பங்குபற்றும் 2வது பயிற்சிப் போட்டி இன்று(31.05) நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ள இந்த போட்டி அமெரிக்காவின் லாடர்ஹில் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version