ரோயல் பார்க்கில் கொலை சம்பவத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று(06.06) தீர்ப்பளித்துள்ளது. இதனுடாக ரோயல் பார்க்கில் கொலை குற்றவாளிக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜூட் சமந்த ஜயமஹவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் அதனை இரத்து செய்யுமாறு கோரியும் சமர்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. குறித்த மனு எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கப்பட்டதுடன், தற்போது வெளிநாட்டில் உள்ள பிரதிவாதியான ஜூட் சமந்த ஜயமஹவை இலங்கைக்கு அழைத்து வர தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
2005ம் ஆண்டு ரோயல் பார்க் சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் இவோன் ஜொன்சன் எனும் 19 வயது யுவதியை கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹவிற்கு 2012ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. எனினும், 2019ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.