தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு ஜனாதிபதிக்கு பேராதரவு வழங்க வேண்டும் – ஆனந்தகுமார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

அவர் தலைமையிலான ஆட்சியே சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு கவசம் என கூறிய அவர் ஜனாதிபதியின் ஆட்சியிலேயே
உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய வாய்ப்பும் உருவாகும் என கூறினார்.

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்குரிய துரிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து தனது ஆளுமையையும், தலைமைத்துவ பண்பையும் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளதால், அவருக்கு மீண்டுமொருமுறை ஆள்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் எனவும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஆனந்த குமார்,

“ பொருளாதார நெருக்கடி, அரகலய உள்ளிட்ட காரணங்களால் 2022 காலப்பகுதியில் நாடு எவ்வாறு இருந்தது? நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்குரிய தலைமைத்துவத்தை ஏற்பதற்கு எந்தவொரு தலைவரும் முன்வரவில்லை. எனினும், அந்த சவாலை ரணில் விக்கிரமசிங்க ஏற்றார். அவரால் முடியாது, மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்றெல்லாம் குறுகிய அரசியல் நோக்கில் எதிரணிகள் விமர்சித்தன. ஆனால் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்திவருகின்றார்.

இன்று வரிசை யுகம் இல்லை. எரிபொருள் விலை, சமையல் எரிவாயு விலை என்பன குறைக்கப்பட்டுள்ளன. மின்சார கட்டணத்தை குறைப்பதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை, வெளிநாட்டு கையிருப்பும் அதிகரித்துவருகின்றது.

நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைத்துகொடுப்பதற்குரிய ஏற்பாடுகளையும் அரசு செய்துகொடுக்கவுள்ளது. மக்கள் மனமறிந்த தலைவர் என்பதாலேயே ரணில் விக்கிரமசிங்கவால் இவற்றையெல்லாம் செய்ய முடிகின்றது.

இருண்ட யுகத்தில் இருந்த நாடு இன்று ஒளியை நோக்கி பயணிக்கின்றது. அதற்குரிய திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முக்கிய பல சட்டமூலங்கள் அடுத்துவரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல ரணிலுக்கு வழிவிட வேண்டும். அவரின் பாதையை மாற்ற முற்பட்டால் அது நாட்டுக்கே ஆபத்தாக அமையும்” என்று கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version