திருத்தம்: டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்று நாளை(19.06) ஆரம்பமாகவுள்ளது.
டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்று இன்று(18.06) நிறைவடைந்தது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் முதல் சுற்று நிறைவு பெற்றுள்ளது. இந்த போட்டி மேற்கிந்திய தீவுகள், சென் லுசியாவில் இன்று(18.06) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் நிகோலஸ் பூரன் 98 ஓட்டங்களையும், ஜோன்சன் சார்லஸ் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குல்படின் நைப் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
219 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் இப்ராஹிம் சார்தான் 38 ஓட்டங்களையும், அஸ்மத்துல்லா ஓமார்சாய் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஓபேத் மெக்கோய் 3 விக்கெட்டுக்களையும், அக்கில் ஹோசைன், குடகேஷ் மோடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, டி20 உலகக் கிண்ண தொடரின் முதல் சுற்றின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 104 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக நிகோலஸ் பூரன் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் 2 குழாம்களும், போட்டி அட்டவணையும் வெளியிடப்படபட்டுள்ளது. முதலாவது குழாமில் இந்தியா, அவுஸ்ரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது குழாமில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சூப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டி மேற்கிந்திய தீவுகள், அன்டிகாவில் நாளை(19.06) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. போட்டி இலங்கை நேரப்படி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.