தபால் முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலையை ஜூலை மாதத்திற்குள் 100 ரூபாவாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட தெரிவித்துள்ளார்.
தற்போது தபால் திணைக்களம் 7,000 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்துவதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் தபால் திணைக்களத்தின் நட்டம் 3,200 மில்லியனாக குறைக்கப்பட்ட போதும், இந்த வருடத்தில் தபால் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் காரணமாக 2,800 மில்லியன் ரூபாவினால் செலவுகள் அதிகரித்துள்ளமையினால் மீண்டும் திணைக்களத்தின் நட்டம் 7,000 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலை தொடருமாயின், 2025ம் ஆண்டில் தபால் திணைக்களத்தின் நட்டம் 5 பில்லியன் ரூபாவை எட்டும் என சுட்டிக்காட்டியுள்ள வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், தபால் சேவையினை 1.5 மில்லியனுக்கும் குறைவான மக்களே பயன்படுத்துகின்ற போதும், முழு நாடும் தபால் திணைக்களத்தின் நட்டத்தை சுமக்கின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டு வரை நாட்டின் தபால் முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலை 15 ரூபாவாக காணப்பட்ட நிலையில், தற்போது குறைந்தபட்ச விலை 50 ரூபாவாகவுள்ளது.
இந்நிலையில், தபால் திணைக்களம் தொடர்ச்சியாக நட்டம் அடைந்து வருவதனால் தபால் முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலையை ஜூலை மாதத்திற்குள் 100 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கபட்டதாகவும், இதற்காக திரைசேரியின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட தெரிவித்துள்ளார்.