சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விடத்தல் தீவு காணி விடுவிப்பு

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய மன்னார் மாவட்டம், விடத்தல் தீவு இயற்கை சரணாலயம் என குறிப்பிடப்பட்ட பகுதி நிறைவுக்கு வருவதாக கடந்த மாதம் 6ம் திகதி  விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறு விடத்தல் தீவு பகுதியிலுள்ள வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் கடல்சார் பூங்கா/கடல் வேளண்மைக்கு விடுவிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

கடந்த வாரம் இடம்பெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது குறித்த காணி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் எழுந்திருந்தன. 

அபிவிருத்தி என்ற பெயரில் இயற்கையான கண்டல் காடுகளை அழித்து மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து அமைக்கப்படும் கடல்சார் பூங்காவிற்கு அனுமதி வழங்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார். 

குறித்த 400 ஏக்கர் நிலமும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பண்ணை அமைப்பதற்கு வழங்குவதற்காகவே விடுவிக்கப்பட்டதாக சந்தேகம் மீனவர்கள் மத்தியில் காணப்படுவதாக மீனவர்கள் சார்பில் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. 

இந்த பிரச்சினையை வெறுமனே 400 ஏக்கர் பிரச்சினையாக கருத கூடாது எனவும், விடத்தல் தீவு பகுதியோடு சேர்ந்த 1400 ஏக்கர் காணிகளும் ஆபத்தில் இருப்பதாக வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் ஆலம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், காணி விடுவிக்கப்பட்டமை  தொடர்பாக தங்களுக்கு எந்த ஒரு அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை எனவும் 1000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு தொடர்பில் அளவீடுகள் இடம்பெற்ற நிலையில், 400 ஏக்கராக குறைக்கப்பட்டு தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளரும் தெரிவித்திருந்தார்.

மன்னார் மாவட்ட காணிகளுக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போது, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதை தொடர்ந்து மன்னார் வனவள திணைக்கள அதிகாரிகளிடமும் கொழும்பு மாவட்ட உயர் அதிகாரிகளிடமும் அறிய முற்பட்ட வேளை குறித்த அறிவித்தல் தொடர்பில் அவர்களுக்கே தெரியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார். 

குறித்த வர்த்தமானி அறிவித்தல் சிங்கள மொழியிலே காணப்படுவதாகவும், அதில் தெரிவிக்கப்பட்ட இணைப்புகள் எதுவும் வர்த்தமானியில் காணப்படவில்லை எனவும் ஒழுங்கான விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும், ஆகவே வர்த்தமானி தொடர்பில் யாருக்கும் ஒழுங்கான விளக்கம் இல்லை என மன்னார் மாவட்ட காணிகளுக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த விடுவிக்கப்பட்ட காணிகள் வேறு எந்த உள்ளூர்  நிறுவனங்களுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ வழங்காது, அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், மன்னார்-விடத்தல் தீவு விடுவிக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு பயன்படுத்துவதாக கடற்றொழில் அமைச்சினால் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று(19.06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“எங்களை பொறுத்த வரையில் விடத்தல் தீவு என்பது கடலால் சூழப்பட்ட பிரதேசம். அது பூகோள ரீதியில் பெறுமதியான பிரதேசம். பருவ காலத்தில் மீன் இனங்கள் அந்த பிரதேசத்திலேயே இனப்பெருக்கம் செய்து ஆழ்கடலுக்கு செல்கின்றன. இலங்கையின் மிகப்பெரிய மீன் உற்பத்தி வங்கி அதாவது இந்த திணைக்களங்களினால் அறியப்படாத மீன் உற்பத்தி வங்கியும் இதை எமது மக்களின் வாழ்வாதாரத்துக்கும் அபிவிருத்திக்கும் பயன்படுத்துவதாக கூறி மிக பலம் பொருந்திய பல்தேசிய கம்பெனிகளுக்கு மக்கள் என்ற போர்வையில் மக்களை பினாமியாக வைத்து விற்பனை செய்வதற்கான மறைமுகமான திட்டமாகும்” என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்திருந்தார்.

குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தப்பட்ட அமைச்சினாலோ அல்லது அமைச்சரினாலோ வழங்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்க வேண்டாம் எனவும், அவை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கோரி விரைவில் விடத்தல் தீவு மக்களினால் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. 

மன்னார் செய்தியாளர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version