இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சீன மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அம்ரி நிசாம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்கவுக்கு இடையில் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சில் நேற்று(19.06) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த பிரதிநிதிகள் குழாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், நிபுணர்கள் இடம்பெற்றிருந்ததுடன், அவர்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்கவுடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டிருந்தனர்.
இதன்போது, இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சீன மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல், எதிர்கால இளைஞர் தொழில் முனைவோருக்கான திட்டங்கள் மற்றும் சீன-இலங்கை இளைஞர் பரிமாற்றத் திட்டங்களின் ஊடாக இளைஞர்களின் கலாச்சார புரிந்துணர்வை வலுப்படுத்தும் எதிர்கால இலங்கைக்கான முக்கிய முன்மொழிவுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக இராஜாங்க அமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு கலாநிதி அம்ரி நிசாம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும், கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினரால் இராஜாங்க அமைச்சருக்கு நினைவுச் சின்னமும் சீன நம்பிக்கைகளுக்கமைய பலம் வாய்ந்ததாக கருதப்படும் தங்கம் கலந்த எழுத்துக்கள் கொண்ட வாழ்த்து மடலொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.