தமிழ்த் தேசியப்பரப்பின் மூத்த அரசியல் நிரந்தரமாக விடுவித்துக் கொண்டது

“தமிழ்த் தேசியப்பரப்பின் மூத்த அரசியல், சட்ட ஆளுமை தமிழ்த் தேசத்திலிருந்து தன்னை நிரந்தரமாக விடுவித்துக் கொண்டது” என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது இரங்கல் பதவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது முகநூலில் இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்

“இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் தனது 91 ஆவது வயதில் காலமானர்.

அன்னாரின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும். தனது சட்டத் தொழிலை தியாகம் செய்து தன்னை மக்கள் அரசியலில் ஈடுபடுத்திய பெருமகனார் அவர்.

தமிழர்களின் மூன்று வகையான போராட்ட காலங்களிலும் தனது அரசியல் சாணக்கியத்தையும், அனுபவத்தையும் பல சந்தர்ப்பங்களில் இராஜதந்திரங்களாக அவர் பயன்படுத்தியிருந்ததை இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தின் இறுதி நம்பிக்கையாக திகழ்ந்த அவரது இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது.

வரலாற்று பாரம்பரியம் மிக்க கட்சியையும், வேறுபட்ட நீரோட்டங்களில் பயணித்த கட்சிகளின் கூட்டமைப்பையும் தனது இயலுமைக்காலங்கள் அனைத்திலும் தன் ஆளுமையால் சிதைவடையாது காப்பாற்றியதில் அவருக்கு இணை அவர் மட்டுமே.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றின் நீண்டகால அனுபவப் பக்கமொன்றை எங்கள் இனம் இழந்துள்ளது.

அன்னாரின் இழப்பால் துயரடைந்துள்ள குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என கவலை வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version