கோல் மார்வல்ஸ் அணி வெளிநாட்டு வீரர்கள் தொடர்பில் முக்கிய கவனம்  

2024ம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ள கோல் மார்வல்ஸ் அணி இன்று(01.07) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஊடக சந்திப்பில் கோல் மார்வல்ஸ் அணியின் தலைவர் நிரோஷன் டிக்வெல்ல, உப தலைவர் மகேஷ் தீக்‌ஷன, பயிற்சிவிப்பாளர் கிரஹாம் போர்ட் மற்றும் அணியின் முக்கிய வீர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன் போது கருத்து தெரிவித்த கோல் மார்வல்ஸ் அணியின் தலைவர் நிரோஷன் டிக்வெல்ல அணியிலுள்ள வெளிநாட்டு வீரர்கள் தொடர்பில் தெரிந்து கொள்வது முக்கியமானதாகும் என சுட்டிக்காட்டியிருந்தார். 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த நிரோஷன் டிக்வெல்ல, 

“நான் வெளிநாட்டு வீரர்களுக்கு எதிராக விளையாடியிருக்கின்றேன், ஆனால் அவர்களுடன் இணைந்து விளையாடியதில்லை. அணியில் சில இளம் வீரர்களும் காணப்படுகின்றனர். 

பயிற்சிவிப்பாளர்கள் உட்பட அனைவருடனும் கலந்துரையாடி அனைத்து வீரர்களிடமிருந்தும் முழு திறனை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கமையவே நாம் ஒரு அணியாக செயற்பட முடியும். 

விக்கெட் காப்பாளராகவும், துடுப்பாட்ட வீரராகவும் மற்றும் அணியின் தலைவராகவும் செயற்படுவது சவாலான விடயமாகும். போட்டியின் போது மூத்த வீரர்களிடமும், இளம் வீரர்களிடமும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கிறேன்” என கோல் மார்வல்ஸ் அணியின் தலைவர் தெரிவித்தார். 

இதேவேளை, அனைத்து விதமான வாய்புக்களுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து இறுதியில் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக கோல் மார்வல்ஸ் அணியின் உப தலைவர் மகேஷ் தீக்‌ஷன தெரிவித்தார். 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த மகேஷ் தீக்‌ஷன, 

” இளம் வயதிலேயே உப தலைவராக செயற்பட வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. அணித் தலைவர் டிக்வெல்லவுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கும், அணியுடன் இணைந்து செயற்படுவதற்கும் எதிர்ப்பார்கின்றேன். 

சில நேரங்களில் நானே அணித்தலைவரை நித்திரையிலிருந்து எழுப்பி விட வேண்டும். இதை நான் நகைச்சுவையாகவே கூறுகின்றேன்” என கோல் மார்வல்ஸ் அணியின் உப தலைவர் தெரிவித்தார். 

இதேவேளை, 3 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுவதினால், மைதானங்களுக்கு ஏற்றவாறு அணிக்கான திட்டங்களை மாற்றியமைப்பது சவாலாக அமையும் என  கோல் மார்வல்ஸ் அணியின் பயிற்சிவிப்பாளர் கிரஹாம் போர்ட் தெரிவித்தார். 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 

“அனைத்து அணிகளும் வலுவாக காணப்படுகின்றன. முதலாவது போட்டியில் 3 முறை கிண்ணத்தை வென்ற ஜப்னா அணியை எதிர்க்கொள்ள இருக்கின்றோம். டி20 கிரிக்கெட்டில் ஆரம்ப மற்றும் இறுதி ஓவர்களின் போது சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடுவது முக்கியமானதாகும். 

போட்டியின் ஆரம்பம் மற்றும் முடிவின் போதும் பந்துவீச்சும் முக்கியமானதாகும். போட்டியின் போது சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொண்டால், இடைப்பட்ட ஓவர்களிலும் ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயம் தொடர்பிலேயே நாம் கவனம் செலுத்துகின்றோம்” என கோல் மார்வல்ஸ் அணியின் பயிற்சிவிப்பாளர் தெரிவித்தார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version