அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Deputy Assistant Secretary of Treasury for Asia, U.S. Department of Treasury) Robert Kaproth) அவர்களது இலங்கைக்கான விஜயத்தின் போது நேற்றைய(01.07) தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஐக்கிய அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி Mr. Andrew Shinn (Econ Officer, Department of State), Mr. Adam Michelow (Political Officer , Department of State) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு இரு தரப்பினரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையற்ற வரிக் கொள்கையினால் நாட்டு மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் ஆசியாவிற்கான பிரதி உதவிச் செயலாளரை தெளிவூட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கி, வரிக் கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது, சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதுள்ள அரசாங்கம் இணக்கப்பாடு கண்டுள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, மக்களுக்கு சார்பானதாக திருத்தம் செய்து, தற்போதைய வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான ஐக்கிய மக்கள் சக்தி வகுத்துள்ள திட்டம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவருக்கு விளக்கமளித்தார்.
மேலும், தேர்தல்கள் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படுவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் ஆசியாவிற்கான பிரதி உதவிச் செயலாளரிடம் தெளிவூட்டினார்.
இச்சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், வி. இராதாகிருஷ்ணன், நிரோஷன் பெரேரா மற்றும் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.