ஆட்சியை பொறுப்பேற்காது புறமுதுகுகாட்டி ஓடியவர் எதிர்கட்சித் தலைவர் – ஆனந்தகுமார்

நாடு நெருக்கடிக்குள் சிக்கியவேளை ஆட்சியை பொறுப்பேற்காது புறமுதுகுகாட்டி ஓடிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியின் பொருளாதார மீட்பு வேலைத்திட்டங்களை எதிர்ப்பது துரோக அரசியலின் வெளிப்படாகும் – என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

அத்துடன், மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் செயற்படும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு மலையக தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ உலகில் வங்குரோத்து நிலையை அடைந்த நாடுகள் குறுகிய காலப்பகுதிக்குள் பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து மீண்டதில்லை. கிறீஸ்போன்ற நாடுகளில் இன்றளவிலும் நெருக்கடி உள்ளது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தூரநோக்கு சிந்தனையாலும், சிறந்த தலைமைத்துவ பண்பாலும் இலங்கை குறுகிய காலத்துக்குள் வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளது. இது பெரும் சாதனையாகும் என்பது மக்களுக்கு தெரியும்.

இன்று எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் இதர பொருட்களின் விலைகள் குறைவடைதுள்ளன. அடுத்துவரும் நாட்களில் மின்கட்டணமும் குறைக்கப்படவுள்ளது. இவற்றை சகித்துக்கொள்ள முடியாததாலேயே, குறுகிய அரசியல் நோக்கில் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அவரின் சகாக்களும், ஏனைய சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்குகின்றனர்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு தற்போதைய நாடாளுமன்றத்தின் முழுமையாக ஆதரவு கிட்டினால் நாடு வேகமாக வளரக்கூடிய சாத்தியம் உள்ளது. அதற்கான சந்தர்ப்பத்தை தடுத்து, குறுக்கு வழியிலேனும் ஆட்சிக்கு வருவதே எதிர்க்கட்சி தலைவரின் கனவாக உள்ளது. அதனால்தான் அவரின் செயற்பாடு துரோக அரசியலாக அமைந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் பல்வேறு திட்டங்களை செயற்படுத்திவருகின்றார். வடக்கு, கிழக்கில் காணி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவருகின்றன. உறுமய பத்திரம் வழங்கப்பட்டுவருகின்றது. சமூக நலன்புரி பாதுகாப்பை உறுதிப்படுத்த அஸ்வெசும வழங்கப்பட்டுவருகின்றது.

அதேபோல மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளையும் உறுதிப்படுத்திவருகின்றார். எனவே, எதிரணியில் உள்ள மலையக கட்சிகளும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை ஆதரிப்பது நல்லது. ஏனெனில் சஜித் வாயால் வடை சுடும் அரசியல்வாதி. ரணில் சொல்லைவிட செயலுக்கு முக்கியத்துவம், முன்னுரிமை வழங்குபவர்.” – என்றார்.

……….

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version