அடுத்த வாரம் முதல் மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் வழங்க ஏற்பாடு

க.பொ.த (உ/த) மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்தொகையை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மாவட்ட செயலாளர்கள் தலைமையில், அனைத்து வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதிபர்களின் ஒருங்கிணைப்புடன், இந்த புலமைப்பரிசில் வழங்கல் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் திகதி, நேரம், இடங்கள் மற்றும் அந்த மாவட்டங்களில் இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட புலமைப்பரிசில் பெறுபவர்களின் பெயர்ப் பட்டியல்கள் அடுத்த சில நாட்களில் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் க.பொ.த (உ/த) கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல் ஏற்கனவே வலய மட்டத்தில் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

க.பொ.த (உ/த) மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.6000/- வீதம், 24 மாதங்களுக்கு வழங்கப்பட இருப்பதோடு ஒரு கல்வி வலயத்திலிருந்து 60 மாணவர்களைத் தெரிவு செய்து 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.

இந்த மாணவர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுடன் ரூ.30,000/- புலமைப்பரிசில் தொகை புலமை பரிசில் வழங்கும் நிகழ்வில் வழங்குவதற்கும், அடுத்த மாதம் முதல் க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதம் ரூ.6000/- புலமைப்பரிசில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள நாட்டின் 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான 12 மாதங்களுக்கு மாதாந்தம் ரூ.3000/-வீதம் உதவித் தொகை வழங்கும் புலமைப்பரிசில் திட்டமும் இதன் கீழ் செயற்படுத்தப்படும்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நிலுவைத் தொகையுடன் 12,000/- உதவித்தொகை, புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் வழங்கப்படும். மேலும் அடுத்த மாதம் முதல் மாதம் ரூ.3000/- வீதம் புலமைப்பரிசில் வழங்கப்படும்.

அதன்படி, மாவட்ட மட்டத்தில் இந்தப் புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் தொடர்பான புதிய தகவல்களைப் பெற ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தை Follow/Like செய்யுமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version