தென் மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு தேவையான டிஜிட்டல் உபகரணங்களை கடந்த 6ம் திகதி காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கையளித்ததாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தென் மாகாணத்தில் 200 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவதற்காக இந்திய அரசின் நன்கொடை உதவி திட்டத்தின் கீழ் இந்த டிஜிட்டல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த திட்டம் மாகாணத்தில் உள்ள 200 பாடசாலைகளுக்கு தேவையான டிஜிட்டல் கருவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள டிஜிட்டல் வளங்கள் மற்றும் ஏனைய மூலங்களிலிருந்து அம்மாணவர்கள் பயனடைய உதவும்.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்தியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வித்துறையில் இலங்கைக்கு பல வழிகளிலும் ஆதரவு வழங்குகின்றமைக்காக இந்திய அரசாங்கத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்மைய காலப்பகுதியில் கல்வித்துறையில் இந்தியா அளப்பரிய தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்திருப்பதாக உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் தெரிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கையில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில் அவ்வாறான முன்னேற்றங்கள் மூலமான பலன்களைபெற இந்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
தென் மாகாணத்தில் மக்களை இலக்காகக் கொண்டு பல்வேறு திட்டங்களை இந்திய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், அம்மாகாணத்தின் முன்று மாவட்டங்களிலும் உள்ள வீடற்ற குடும்பங்களுக்காக இந்திய அரசாங்கம் 1300க்கும் அதிகமான வீடுகளை நிர்மாணித்துவருவதாகவும் தெரிவித்தார்.
உயர் பெறுபேற்று சமூக அபிவிருத்தி திட்ட கட்டமைப்பின் கீழ் குறித்த தென் மாகாணத்துக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இக்கட்டமைப்பின் கீழ் 18 நன்கொடைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 5.5 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.