போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல மனித உயிர்கள் பலியாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 297 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன வன்னி, மன்னார் புனித ஜோசப் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (08.07) இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,
“யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியின் விடியலை காணவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரிவுபடுத்தி, இதுவரை எந்த தலைவர்களும் தலைமைத்துவம் வழங்காத சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த நாம் நடவடிக்கை எடுப்போம்.
இந்த உதவிகளைப் பெற்று, வடக்கு கிழக்கு இரு மாகாணங்களை மையமாகக் கொண்டு, முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். இன, மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி 41 இலட்சம் பிள்ளைகளினது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாத்துத் தருவோம்.
வட மாகாணம் இதுவரை மாற்றாந்தாய் கவனிப்பையே பெற்று வந்தது. இந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, இந்த மாகாணத்தின், இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி யுகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்போம்.
பாடசாலை மாணவர்களைப் பாதுகாத்து போஷித்து பக்க பலத்தை வழங்க ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வியலாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் போன்றோர் சிறப்பான பணியை ஆற்றிவருகின்றனர். இவர்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு இவர்களுக்கும் முழு உரிமைகளுடன் கூடிய புதிய கல்வி முறைக்கு வலுவூட்டத் தேவையான அதிகபட்ச பக்கபலத்தை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
எமது நாட்டு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு மீனவ சமூகத்தினால் எமது மீனவ சமூகம் பாரிய பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த பிரச்சினைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் கலந்துரையாடி தொடர்ச்சியாக நிலவிவரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும்” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான ஒருங்கிணைப்பாளர் திருமதி உமாசந்திரா பிரகாஷ் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.