இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி எதிர் 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்கு இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டி கடந்த 08ம் திகதி ஆரம்பமாகியது. போட்டியின் மூன்று நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் போட்டி சமநிலையிலுள்ளது.
இங்கிலாந்து, வார்ம்ஸ்லியில் நடைபெறும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இளையோர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 85.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் டினுர கலுப்பஹான 103(144) ஓட்டங்களையும், நெதன் கல்டெரா 55(114) ஓட்டங்களையும், டினிரு அபேவிக்ரம 43(60) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் எஎம் பிரென்ச் 4 விக்கெட்டுக்களையும், என் சர்மா, அலெக்ஸ் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பின்னர், முதலாவது இன்னிங்ஸிற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஃப்ரெடி மெக்கான் 92(114) ஓட்டங்களையும், கேஷன பொன்சேகா ஆட்டமிழக்காமல் 72(124) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் விஹாஸ் தெவ்மிக 2 விக்கெட்டுக்களையும், நெதன் கல்டெரா, பிரவீன் மனிஷ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்து இளையோர் அணி முதலாவது இன்னிங்ஸில் 131 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள நிலையில், போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று(11.07) இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.