தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியாவுக்கு வெற்றி  

சிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-1 என்ற ரீதியில் முன்னதாகவே கைப்பற்றியிருந்த நிலையில் தொடரின் 5வதும் இறுதியுமான போட்டி சிம்பாப்வே, ஹராரேவில் இன்று(14.07) நடைபெற்றது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் சஞ்சு சாம்சன் 58(45) ஓட்டங்களையும், சிவம் துபே 26(12) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். சிம்பாப்வே அணி சார்பில் பந்துவீச்சில் முசரபானி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.  

168 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. சிம்பாப்வே அணி சார்பில் டியொன் மயர்ஸ் 34(32) ஓட்டங்களையும், பராஸ் அக்ரம் 27(13) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுக்களையும், சிவம் துபே 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதன்படி, இந்திய அணி 42 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், சிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற ரீதியில் கைப்பற்றிக் கொண்டது. 

தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த போதும் அடுத்த 4 போட்டிகளிலும் வெற்றியீட்டி தொடரை தன்வசப்படுத்திக் கொண்டது. 

இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் சிவம் துபேவும், தொடரின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தரும் தெரிவு செய்யப்பட்டனர்.

Social Share

Leave a Reply