யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலை நடவடிக்கைகள் சுமுகமான முறையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
பதில் அத்தியட்சகர் பதவியிலிருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வாரம் பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்பின்னர் வைத்தியர் அர்ச்சுனா, சுகயீன விடுமுறை அறிவித்து கொழும்பு சென்றிருந்தார்.
இதனையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் கடந்த 09 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சுகயீன விடுமுறைகளின் பின்னர் இன்று (14.07) வைத்தியர் அர்ச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.
குறித்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் யார் என்பது தொடர்பில் நீண்டநேர விவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பொலிஸாருடன் இடம்பெற்ற நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் வைத்தியர் அர்ச்சுனா வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்தும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ரஜீவ் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.