அனுரவுக்கு எதிரான இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு எதிர்க்கட்சி கண்டனம் 

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த முன்வைத்த கருத்துக்களுக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். 

“அனுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு ஒரு சிறிய கால்வாயையாவது நிர்மாணித்திருக்கிறாரா? நான் அரசியலில் இருக்கும் வரை அவரை இந்த நாட்டின் ஜனாதிபதியாகுவதற்கு அனுமதிக்க மாட்டேன்” என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டியில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது தெரிவித்திருந்தார். 

இராஜாங்க அமைச்சரின் கருத்தை கண்டித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, இலங்கை வரலாற்றில் தேர்தல் தலையீடுகள் மற்றும் வன்முறைகளை கருத்தில் கொண்டு இவ்வாறான கருத்துக்கள் ஆபத்தானவை என சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு வேட்பாளரையும் தேர்தலினுடாக தேர்ந்தெடுக்கப்படுவதை அனுமதிக்கவோ அல்லது அனுமதியை மறுக்கவோ ஏனைய அரசியல் வாதிகளுக்கு உரிமையில்லை என எரான் விக்கிரமரத்ன வெளியிட்டுள்ள ‘X’ தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சஜித் பிரேமதாசவே தேர்தலில் முன்னிலையில் இருப்பதாக தாம் நம்புவதாகவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version