LPL – யாழ் அணி இறுதிப் போட்டியில்

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஜப்னா கிங்ஸ் மற்றும் மற்றும் கண்டி பல்கோன்ஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது தெரிவுகாண் போட்டியில் யாழ் அணி 01 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இன்று (20.07) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் யாழ் அணி வெற்றி பெற்றதன் மூலம் நாளை கோல் மார்வல்ஸ் அணியை யாழ் அணி சந்திக்கவுள்ளது,

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

188 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய கண்டி பல்கோன்ஸ் அணி சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்தியது. டினேஷ் சந்திமால் 11(10) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதிரடியாக துடுப்பாடிய அன்றே பிளட்சர் 38(21) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மொஹமட் ஹரிஸ் 26(20) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதிரடியாக துடுப்பாடிய போதும் தொடர்ச்சியான இடைவெளிகளில் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டமை பின்னடைவை ஏற்படுத்தியது. வனிந்து ஹசரங்க 13(08) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். விக்கெட்கள் வீழ்ந்த போதும் சிறப்பாக துடுப்பாடிய கமிந்து மென்டிஸ் 32(23) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தஸூன் சாணக்க 03(04) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அஞ்சலோ மத்தியூஸ் 18(17) ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். இறுதி நேரத்தில் பவான் ரத்நாயக்க, ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் அதிரடி நிகழ்த்தி போட்டியின் போக்கை மாற்றினார்கள். இறுதி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உருவானது. இருப்பினும் கண்டி அணியால் வெற்றி பெற முடியவில்லை. ரமேஷ் மென்டிஸ் 30(11) ஓட்டங்களையும், பவான் ரத்நாயக்க 11(05) ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

கண்டி அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றது.

பேபியன் அலன் 04 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களை வழங்கி 04 விக்கெட்களை கைப்பற்றினார். வியாஸ்காந்த் 04 ஓவர்கள் பந்துவீசி 30 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார். கடந்த போட்டிகளில் சிறப்பாக பந்துவீசமுடியாமல் போன நிலையில் வியாஸ்காந்த் இந்தப் போட்டியில் மூன்று விக்கெட்களை கைப்பற்றி கண்டி அணிக்கு சிக்கலை ஏற்படுத்தினார். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் கண்டி அணியின் ஆரம்ப விக்கெட்களை தகர்க்க யாழ் அணியின் வெற்றி உறுதியானது.

குஷல் மென்ட்ஷின் அபார துடுப்பாட்டம் மூலம் யாழ் அணி வெற்றி பெறக்கூடிய இலக்கை தொட்டுள்ளது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக துடுப்பாடி வந்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தமை யாழ் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பத்தும் நிஸ்ஸங்க 18(20) ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 11(10) ஓட்டங்களையும் பெற்றனர். ரிலி ரொசவ் 07(06) ஓட்டங்களையும், சரித் அஸலங்க 04(06) ஓட்டங்களையும் பெற்றனர். குஷல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 105(54) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது அவரின் இரண்டாவது 20-20 சதமாகும். அத்தோடு 20-20 போட்டிகளில் பெற்றுக்கொண்ட கூடுதல் ஓட்ட எண்ணிக்கையும் ஆகும். மேன்டிஸோடு இறுதி நேரத்தில் அஷ்மதுல்லா ஒமர்ஷாய் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி அதிரடியாக ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியமை யாழ் அணியின் ஓட்ட அதிகரிப்புக்கு கைகொடுத்தது. அவர் ஓட்டங்களுடன் 26(13) ஆட்டமிழந்தார். சத்துரங்க டி சில்வா 01 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

யாழ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது.

கண்டி அணியின் பந்துவீச்சில் சத்துரங்க டி சில்வா 4 ஓவர்களில் 22 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களையும், ரமேஷ் மென்டிஸ் 2 ஓவர்களில் 10 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். வனிந்து ஹசரங்க 4 ஓவர்களில் 41 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மொஹமட் ஹஸ்னைன் 4 ஓவர்களில் 48 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்டை கைப்பற்றினார்.

அணி விபரம்

கண்டி பல்கொன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், மொஹாமட் ஹஸ்னைன், கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, மொஹமட் ஹரிஸ், ரமேஷ் மென்டிஸ், சமத் கோமஸ், சதுரங்க டி சில்வா

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, ரிலி ரொசோவ், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, பேபியன் அல்லென், தனஞ்சய டி சில்வா, அஸ்மதுல்லா ஒமர்ஷாய், விஜயகாந்த் வியாஸ்காந்த், ஜேசன் பெஹ்ரன்டோப்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version