கிளிநொச்சியில் விசேட மீளாய்வு கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் விசேட மீளாய்வு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த 26ம் திகதி நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 

அரசாங்கத்தின் அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தடையாக இருக்காது. குறித்த விடயம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளேன்.

எதிர்வரும் ஆகஸ்ட் 15ம் திகதிக்கு பின்னர், அரசாங்க வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது, வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராக அவை பயன்படுத்தப்படுமாயின், தேர்தல்கள் ஆணைக்குழு தமது கரிசனையை வெளிப்படுத்தும் என தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  கடந்த 14ம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தின் முன்னேற்றங்கள், இதுவரை நாட்கள் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் திணைக்களங்களின் தலைவர்கள்,  துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் , பொலிஸ் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version