ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட குழுக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும், அமைச்சர்களும் ஒன்றினைந்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவும் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று(29.07) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில், மொட்டு சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட பின்னணியில், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தற்போதைய ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவின் கட்சிக் காரியாலயத்தில் நேற்று(29.07) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, அனுப பஸ்குவல், கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி. திஸாநாயக்க, பிரேம்நாத் சி தொலவத்த உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.